சென்னை: உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருவதால் அதற்கேற்ப குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து வருகின்றனர். குறிப்பாக ஒரு கொலை நடந்தால், அடுத்த நொடியே அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளின் அங்க அடையாளங்களை காணுகின்றனர். இந்த காலத்திலும் சென்னையில் கடந்த 18 வருடங்களில் 8 கொலை வழக்குகள் துப்பு துலங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த சம்பவங்கள் பின்வருமாறு.
- 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் கே.கே.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பரிமளம் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.
- 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரி சங்கரன் அவென்யூவில் வசித்து வந்த ஜேக்கப் மற்றும் மேரி தம்பதி, அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டிலும் தங்க நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை போனது. படப்பை பகுதியில் தம்பதியரின் கார் மீட்கப்பட்டது.
- 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தின் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகை ஆதிலட்சுமி, அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது வீட்டிலும் பணம், நகை கொள்ளை போனது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
- 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி நகர் விரிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ரஞ்சிதம் என்ற பெண், கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது வீட்டில் இருந்தும் தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
- 2013ஆம் ஆண்டு பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த தொலைத்தொடர்பு நிறுவன ஊழியரின் மனைவி சுமதி, அவரது வீட்டினுள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது வீட்டிலும் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
- 2015ஆம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த தினேஷ் என்ற இளைஞர், தனது வீட்டில் காதலியான அருணாவை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
- 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழும்பூர் பகுதியில் உள்ள பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசித்து வந்த சாரதா என்பவர், கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது வீட்டில் இருந்தும் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
- 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கே.கே.நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண், தனது வீட்டில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயின் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த அனைத்து கொலை வழக்குகளுமே ஆதாய கொலைகளாக பார்க்கப்படுகின்றன. எனினும் இந்த எட்டு கொலை வழக்குகளிலும் எந்த விதமான துப்பும் கிடைக்காமல் கொலையாளியை கண்டறிவதில் காவல்துறையினருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த 8 ஆதாய கொலை வழக்குகளும் முன்னேற்றம் இல்லாமலும், அடுத்த கட்ட நகர்வை எட்டாமலும் தொடர்ந்து கிடப்பில் இருந்து வருவது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் முதியவர்கள்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதியவர்கள் அதிகமாக கொலை செய்யப்படும் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டு திருச்சியில் கடத்தப்பட்டு கை, கால் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இதுவரை துப்பு துலங்காமல் உள்ளது. இதனிடையே சென்னையில் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளின் குற்றவாளிகளை கைது செய்ய அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக்கரணை கொலை சம்பவம்...5 கல்லூரி மாணவர்களின் வாக்குமூலம்...ஒருவர் தலைமறைவு