அங்கீகாரம் இல்லாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி அங்கீகாரம் இன்றி தனியார் பள்ளி செயல்பட்டு வருவது தவறாகும்.
அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி சான்றிதழ்கள் தகுதியற்றதாகும். மேலும் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளை எழுத முடியாத நிலையும் ஏற்படுகிறது.
அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கீகார ஆணையினை கேட்டு பெற வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வரும் 23ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அந்த பட்டியலில் உள்ள பள்ளிகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தியாக வெளியிட வேண்டும்.
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை எண்ணிக்கையுடன் பெறப்பட வேண்டும். 2019-20ஆம் கல்வியாண்டு தொடங்கும் போது மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்பதையும், அனைத்து குழந்தைகளும் அங்கீகாரம் உள்ள பள்ளியில் படிக்கின்றனர் என்பதையும் முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.