சென்னை: கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் கார்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரோ ஆகிய மூவர் குழு கரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கினால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் அதனை சீர் செய்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவுகள் குறித்து கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கார்த்திக் முரளிதரன் கூறியதாவது, “கடந்த 2019 ஆண்டில் ஏற்பட்ட கரோனா தொற்றினால் உலகளவில் கற்றல் பாதிப்புகள் ஏற்பட்டது. தொழில்நுட்ப கருவிகள் மூலம் வளர்ந்த நாடுகளில் கற்றல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வளரும் நாடுகளில் சமுதாயத்தில் பின்தங்கியவர்கள் கற்பதில் சிரமம் இருந்தன.
சுமார் 18 மாதங்கள் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டபோது, மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாட்டை சரிசெய்ய தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி செயல்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 220 கிராமங்களில் 19000 மாணவர்களின் கற்றல் அடைவுத்திறனை ஆய்வு செய்தோம்.
2019ஆம் ஆண்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடக்க கல்வியில் கிராமப்புற மாணவர்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு தகவல்கள் திரட்டினோம். அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு வந்ததன் பின்பாக, கற்றல் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய, கரோனாவிற்கு முன்பாக எடுத்த தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தது.
மற்ற மாநிலங்களில் கற்றல் குறைபாடு 30-40 விழுக்காடு சரி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு சுமார் 65 விழுக்காட்டிற்கு மேல் கற்றல் குறைபாடு சரி செய்வதற்கு இல்லம் தேடி கல்வித் திட்டமும் காரணமாக இருந்துள்ளது. மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததை உலக வங்கியின் கல்வி பிரிவு அதிகாரிகள் அதை பகிர்ந்ததுடன், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என கூறியுள்ளனர்.
மேலும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என அரசிற்கும் தெரிவித்துள்ளோம் என கூறினார். ஐநா-வின் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்கவும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் கரோனாவுக்கு பின்பாக கற்றல் குறைபாடுகளை குறித்து மிக சரியாகவும், விரைவாகவும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த கட்டுரையை புகழ்ந்துள்ள பிரபல கல்வியாளர்கள் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பெரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும், கலிபோர்னியா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள ஆராய்ச்சி முடிவுகள் குறித்து இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம் பகவத் கூறும்போது, “கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் கரோனா தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இழப்புகளில் மூன்றில் இரண்டு மடங்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கணக்கு தமிழ் போன்ற பாடங்களில் சிறப்பாக கல்வி பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்டம் இன்னும் ஆறு மாதத்திற்கு தொடர்ந்து செயல்படுத்தப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்பட்ட கற்றல் இழப்புகள் தன்னார்வலர்கள் சொல்லிக் கொடுத்ததன் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியாக எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எண் அறிவு மற்றும் எழுத்தறிவு கற்பிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தொடக்கம்