சென்னை: யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாசார கட்டடத் திறப்பு விழாவிற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மூன்று நாள் அரசு முறை பயணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைப் பயணம் மேற்கொண்டார்.
இலங்கை செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் எல். முருகன்: 'அரசு முறை பயணமாக இலங்கை நாட்டிற்கு மூன்று நாட்கள் செல்கிறோம். கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில் கலாசார மையத்தை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இருந்தார். அது இந்திய நாட்டு நிதி உதவி மூலம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கை நாட்டில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருகின்ற 11ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாசார மையம் தொடங்கப்பட உள்ளது. அதில் கலந்து கொள்ள செல்கிறேன்' என்றார்.
மேலும் 'யாழ்ப்பாணம், தலைமன்னார், கொழும்பு உள்ளிட்ட பகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள உள்ளேன். தமிழ்த் தலைவர்களை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இன்றைய, தேதியில் தமிழ்நாடு மீனவர்கள் யாரும் இலங்கை சிறையில் இல்லை. அதேபோல் இந்தியா, இலங்கை இடையே இணைப்புக் குழுக்கள் கூட்டம் கரோனா காலத்தால் நடைபெறவில்லை. அந்த கூட்டங்கள் மீண்டும் நடக்க உள்ளது. அதில் மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்யப்படும்' என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு டிவிட்டர் பக்கம் ஹேக்.!