சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் எல். முருகன், தன்னுடைய வாக்கை கிழக்கு அண்ணாநகர் பகுதியில் உள்ள சென்னை மிடில் பள்ளியில் மாலை 4.30 மணிக்குச் செலுத்த இருப்பதாகத் தகவல் வெளியானது.
கள்ள ஓட்டுப் பிரச்சினை
இதையடுத்து அவரது வாக்கை கள்ள ஓட்டாக வேறு ஒருவர் செலுத்திவிட்டதாகத் தகவல் பரவியது. இது குறித்து அண்ணாமலை தன்னுடைய ட்விட்டரில், "அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம் செய்கின்றனர்.
ஆளுங்கட்சிக்குச் சாதகமாகப் பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டுவருகிறது. எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காகப் போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தேர்தல் ஆணையம் சார்பில் உடனடியாக விளக்கம் கேட்கப்பட்டதில், "எல். முருகனின் வாக்கை யாரும் கள்ள ஓட்டாகப் போடவில்லை. தவறுதலாக மத்திய இணை அமைச்சரின் பெயர் ஆர். முருகன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
வாக்களித்தார் எல். முருகன்
மேலும் எல். முருகன் தன்னுடைய வாக்கை அண்ணாநகர் வாக்கு மையத்தில் செலுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த விளக்கத்திற்குப் பின், எல். முருகன் தன்னுடைய வாக்கை அண்ணா நகரில் உள்ள 101ஆவது வார்டில் செலுத்தினார்.
இதற்கு முன்பாக, அமைச்சரின் வாக்கு கள்ள ஓட்டாகப் போடப்பட்டதாக வெளியான தகவலையடுத்து அவரது கட்சி ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலைநகரில் அரங்கேறிய அராஜகம்: வாக்குச்சாவடிக்குள் கத்தியுடன் புகுந்த திமுகவினர்!