சென்னை: தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பண வீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.
கரோனா காலத்தில் மக்களிடையே பணப்புழக்கம் குறையாத வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க நடவடிக்கை மேற்கொண்டது. அதன் மூலம் சாமானிய மக்களுக்கு அவர்களின் வருவாய் தடை பெறாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒன்றிய அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு முன்னரே தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. கரோனா காலகட்டத்திலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் 13,000 கோடி ரூபாய் செலவில் பொது விநியோகம் உள்ளிட்டப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.
தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிக்கும் வேளையில், அரசின் கடன் குறைப்பு மற்றும் பெற்ற கடனுக்கான வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் மீண்டும் ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமாக இருந்ததில்லை.
அதன் பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு பின்னர் தான் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கடன் பெறுவதில் ஒன்றிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு கட்டுப்பாடு இன்றி அதிகளவு கடன்களைப் பெற்று வருகிறது.
திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்று பொது விநியோகத்திட்டம், தேவையற்ற செலவுகளைக் குறைப்பது மற்றும் துறைகளின் மூலம் பெறக்கூடிய வருவாயை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டை விட 37% அதிகரித்துள்ளது; அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட வருவாய் வரி 23% அதிகரித்துள்ளது. அரசின் கடனும் சிறிது குறைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை 4.61% இருந்த நிலையில் தற்போது 3.50% குறைந்துள்ளது. இதனை வரும் காலங்களில் மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.