இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கு 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த பணிக்கு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் விண்ணப்பித்து, எழுத்து, உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றார். அந்த நிலையில், 2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடித்ததாக பாப்பிரெட்டிபட்டி காவல் நிலையத்தில் பதிவான வழக்கை காரணம் காட்டி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் பாலாஜி வழக்கை மறைத்துள்ளதாகவும், காவல் பணியில் விண்ணப்பிக்கும் போது ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும், அதை மறைத்து விண்ணப்பித்ததை ஏற்க முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததை தவிர வேறு குற்றம் பாலாஜி செய்யவில்லை எனவும், பண்டிகைக்கு பட்டாசு வெடித்ததை காரணம் காட்டி தகுதியிழப்பு செய்ததை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், அலுவலர்கள் இயந்திர தனமாக இருக்கக் கூடாது என்றும் கூறி, பாலாஜி விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
பாலாஜியின் விண்ணப்பத்தின் மீது எட்டு வாரங்களில் பரிசீலித்து சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.