சென்னை: உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், 8ஆவது நாளாக இன்று (மார்ச் 07) 181 தமிழ்நாடு மாணவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
விமான நிலையத்தில் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்றார். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை அவர்களது பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு பெற்றோர், மாணவர்கள் பூங்கொத்து தந்து நன்றியை தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மாணவர்கள் வீடு சென்று சேரும் வரை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டிற்கு ஆயிரத்து 38 மாணவர்கள் மீட்கப்பட்டு வந்துள்ளனர். மேலும், 140 மாணவர்கள் டெல்லியில் உள்ளனர். அடுத்தடுத்த வரக்கூடிய விமானங்களில் அழைத்து வரப்படவுள்ளனர்” என்றார்.
பின்னர் பேசிய மாணவி நிவேதா, “கார்கிவ் நகரில் 7 நாள்கள் பதுங்கு குழிகளில் இருந்தோம். மிகவும் பயமாக இருந்தது. உணவுக்குக் கூட கஷ்டப்பட வேண்டிய சூழல் இருந்தது. இரண்டு வேலை மட்டும் உணவு வழங்கினார்கள். தற்போது தமிழ்நாடு வந்ததும் சொர்க்கத்திற்கு வந்தது போல இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து மாணவர் கிஷோர் குமார் கூறுகையில், “என் கண் முன் நான் படித்த பல்கலைகழகம் அழிந்தது. உக்ரைன் அதிபர் தனி நபராக தொடர்ந்து போராடி வருகிறார். இன்று உலகமே அவரை திரும்பி பார்த்து வருகிறது. உக்ரைன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்த பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி” என்றார்.
இதையும் படிங்க: இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலத்தை பார்வையிட்டார் தமிழிசை