திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் தன்னைச் சந்திக்க வந்த நிர்வாகிகள் மற்றும் தொன்டர்களிடமும் அவர் கலந்துரையாடினார்.
இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு ஏற்ற பின் முதல் முறையாக தனது பிறந்த நாளை கொண்டாடும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தி.மு.கவினர் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கட்சி தலைமையகம் அமைந்திருக்கும் சென்னை அண்ணாசாலையில், 'இளைஞர்களின் எழுச்சி நாயகனே', 'கழகத்தின் எதிர்காலமே', 'ஆளப்பிறந்த மகராசனே', 'வருங்கால சென்னை மேயரே' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. எந்தவித அரசியல் முன் அனுபவமும் இல்லாத உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அக்கட்சியின் வாரிசு அரசியல் என பலரும் குற்றம்சாட்டி வரும் வேளையில் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.