சென்னை: ஆந்திரா மாநிலத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்கவுள்ள மாணவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலந்துரையாடினார்.
இருளர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்த மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் சேலத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 520 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அதில் வெற்றி பெற்ற 210 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மேலைகோட்டையூர் விளையாட்டு பல்கலைகழகத்தில் கடந்த ஒரு மாதமாக பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது 177 மாணவர்கள் தமிழ்நாடு சார்பில் ஆந்திராவில் நடைபெறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த வீரர்கள் ஆந்திராவுக்கு புறப்படும் நிலையில் அமைச்சர் உதயநிதி அவர்களோடு உரையாற்றினார். ஆந்திரா மாநிலம் குண்டுரில் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும் 25 மாநிலங்களை சார்ந்த 4336 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளர். மேலும் மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலின் படி சிறப்பாக செயல்படுவேன் என தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் தேசிய விளையாட்டுகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் தங்க கோப்பை போட்டி நடத்த நிதி ஒதுக்கப்பட்டு இந்த போட்டிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும்.
மாற்று திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கான பணிகள் மேற்கொள்ளபடும். மேலும் உதயநிதி சிறப்பு திட்ட செயலாக்க துறையின் மூலம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் எனக் கூறினார்.
இதையும் படிங்க: மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு - எப்போது வரை?