தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்திவந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதால் மரணமடைந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற உதயநிதி பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், அவர் இ-பாஸை பயன்படுத்தாமல் சாத்தான்குளத்திற்கு சென்றதாக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்திருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள அவர், "மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், "இருவரின் கொலைக்கு காரணமான போலீசார், அவர்களுக்கு துணைபோனவர்கள் யார்யார் என்பதைத்தவிர இதில் விசாரிக்க பெரிதாக ஏதுமில்லை. ‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்பதை மனதில் கொண்டு போலீசார் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணையை தொடங்க வேண்டுமாய் முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.
‘தரையில் விழுந்து புரண்டனர், இருவரையும் ஒன்றாக அழைத்துச்சென்றோம்’ என்பதாக ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வரிக்கு வரி பொய்யாக ஜோடித்து எழுதப்பட்டது என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.