சென்னை: திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி துறைமுகம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று (நவ.30) வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, "தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இது போன்ற இடர்பாடான நேரங்களில் அரசு பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. முதலமைச்சரின் உத்தரவுபடி அமைச்சர்கள், அலுவலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முழுவீச்சில் மக்களுக்கான நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.
சிங்கப்பூராக மாறி விட்டதா சென்னை?
சென்னை மாநகரில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு கடந்த கால செயல்பாடற்ற அதிமுக ஆட்சியே காரணம். கடந்த பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையை சிங்கப்பூராக மாற்றி விட்டோம், சென்னை நகரில் மழைபெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்றார். அடையாறு கால்வாய், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவைகளை ஆயிரம் கோடி ரூபாயில் சீரமைத்துவிட்டாதாக கூறினார்.
ஆனால் அவர் சொன்ன படி உண்மையிலேயே அந்தப் பணிகளை முழுமையாக செய்திருந்தால் தற்போது பெய்த மழைக்கு சென்னையில் மழைநீர் தேங்கியிருக்காது.
திமுக அரசு அமைந்தவுடன் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி, தடுப்பூசி செலுத்துவதில் முழு கவனம் செலுத்தினோம். மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினோம். திமுக அரசும், முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகளாலும் வெள்ள பாதிப்புகளிலிருந்து விரைவில் மீண்டு வருவோம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு வெற்றி
முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளை அனைத்து ஊடகங்களும், சமூக வலைதளப்பக்கங்களிலும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இதன் எதிரொலி நிச்சயம் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை பரிசாக அளிப்பார்கள். பாஜகவிற்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இவர்களது புழுகு மூட்டைகளை மக்கள் நம்பமாட்டார்கள்.
பாஜகவினரைப் போல் ஒரு நாளைக்கு ஒரு இடத்தில் பெயருக்கு மக்களுக்கு உதவி செய்து விட்டு, விளம்பரத்திற்காக மக்கள் பணியாற்றுபவர்கள் அல்ல நாங்கள். திமுக அரசு தொடர்ந்து நேர்மையான வழியில் செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுகளை மதித்து இயங்குகிறது. பாஜகவின் பூச்சாண்டிக்கு திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட பயப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்