சென்னை: ஐக்கிய அரபு அமீரக அதிபரின் மறைவுக்கு நாட்டில் இன்று (மே14) துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 2004ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் இருந்து வந்தார். அவருக்கு வயது 74.
ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சையத் அல் நஹ்யான் மறைவுக்கு இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இதையொட்டி தலைமைசெயலகத்திலும் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சையத் அல் நஹ்யானுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க:அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநர் படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!