சென்னை: தாம்பரம் அடுத்த பாரதி நகர் பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடையின் உரிமையாளர் கண்ணன்(38). இவரது கடையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல், கடையை அடைத்துவிட்டும் மறுநாள் கடையை திறந்து பார்த்தபோது, கடையில் ஒருபக்க தகரம் உடைக்கப்பட்டு கடை முழுவதும் ரத்த கரையாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ரூ.8000 திருட்டு; கடைக்குள் ரத்த கரையால் அதிர்ச்சி: அங்கிருந்த சிசிடிவியை சோதனை செய்ததில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடையில் தகரத்தை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தன்னுடைய முகம் பதிவாக கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராவை திருப்பி வைத்து விட்டு கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.8000 பணத்தினை திருடியது தெரியவந்தது. அப்போது தகரம் கை கால்களில் கிழித்ததால் ரத்தம் கொட்டியது. இருப்பினும், அதையும் பொருட்படுத்தாமல் திருடுவதை குறிக்கோளாக கொண்டு இவ்வாறு ரத்தம் சிந்தி பணத்தை திருடிச் சென்றார் என்பது தெரியவந்தது.
காயத்திற்கு மருந்து வாங்கப் போய் மாட்டிக்கொண்ட திருடன்: இது குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில் பழக்கடை, இறைச்சி கடை, பழையப் பொருள்கள் வாங்கும் கடைகள் என அடுத்தடுத்த 5-க்கும் மேற்பட்ட கடைகளில் மொத்தமாக ரூ.12,500 வரை பணம் திருடுபோனதாக அக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
போலீசாரின் விசாரணையில், அப்போது கொள்ளை போன கடை அருகே உள்ள மருந்து கடையில் விளையாடும்போது தவறி கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டதாக கூறி அதற்கு கட்டுப்போடுவதற்கு மருந்துகள் வேண்டும் என ஒரு நபர் கூறியுள்ளார். மேலும், இது போன்ற பெரிய காயத்திற்கு மருத்துவமனைக்கு தான் சென்று கட்டுப்போட வேண்டும்; மருந்து தர முடியாது என மருந்து கடையினர் மறுத்துள்ளனர்.
குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை: இதற்கு மருந்தகத்தில் இருந்தவரை திட்டிக்கொண்டே அந்நபர் வெளியே வந்தபோது, அங்கிருந்த காவல்துறையினர் இருவரையும் அழைத்துள்ளனர். இதையடுத்து உடனே, அந்நபர் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க போலீசார் அவரையும் அவருடன் இருந்தவரையும் துரத்திப் பிடித்தனர். காயம் எப்படி வந்தது எனப் போலீசார் கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய இருவரையும் போலீசார் கிடுப்பிடியாக பிடித்து விசாரித்ததும், கஞ்சா போதையில் திருடிய போது இக்காயம் ஏற்பட்டதாகவும், போதை தெளிந்ததும் வலி ஏற்பட்டதாகவும் ஆகவே, காயத்திற்கு மருந்து வாங்க வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.
3 ஆண்டுகளாக தொடர் திருட்டு: இதனைத்தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில் பெருங்களத்தூர் சீனிவாசன் நகர் பகுதியில் சேர்ந்த சரவணன்(21), தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த முருகன்(26) என்பதும் தெரியவந்தது. இதுமட்டுமின்றி பல திடுக்கிடும் தகவல்களும் அப்போது வெளியானது. கடந்த மூன்று வருடங்களாக தாம்பரம், பெருங்களத்தூர், சேலையூர் என சின்ன சின்ன கடைகளுக்குள் தகரத்தை கழற்றி உள்ளே நுழைந்து கையில் கிடைக்கும் பணத்தை திருடி செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தது தெரியவந்தது.
திருடிய கடையிலேயே பொருளை விற்று ரூ.1 லட்சம் பெற்ற பலே திருடர்கள்: இவ்வாறு ரூ.5,000 முதல் 10 ஆயிரம் வரை குறைந்த அளவே பணங்கள் திருடுவதால் கடைக்காரர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும் இதுமட்டுமின்றி பாரதி நகர் பகுதியில் சென்ற ஆண்டு பழைய பொருள்கள் வாங்கும் கடையில் தொடந்து செம்புகளை திருடி சில மாதங்கள் கழித்து திருடிய கடையிலே ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவ்வாறு ரத்தம் சிந்தி திருடிய பணத்தை ஒரே நாளில் செலவு செய்துவிட்டதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பின்னர், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறிய திருட்டு புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை தேவை: சிறிய சிறிய திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்கும்போது உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே பெரிய திருட்டுகள் மற்றும் புதிய கொள்ளையர்கள் உருவாவதை தடுக்க முடியும் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்று வருடங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்டு இதுவரையில் போலீசில் சிக்காமல் தனது வாழ்க்கையை ஓட்டி வந்த இளம் திருடர்கள் முதல் முறையாக சிசிடிவி கேமரா மூலம் போலீசில் சிக்கி சிறைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எவ்வளவு நாள்தான் தொழிலாளியாகவே இருப்பது? வேலை கொடுத்தவரிடமே வேலையைக் காட்டிய ஓட்டுநர் கைது!