சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் பவித்ரா என்ற பெண் தனது வீட்டில் ஐந்து இளம்பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்திவந்தார். இங்கு, வாடிக்கையாளர்கள் போல் வந்த ஐந்து இளைஞர்களில் இருவர், வீட்டிற்குள் நுழைந்து மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பவித்ராவின் கழுத்தில் வைத்து அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றித் தரும்படி மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து பயத்தில் தான் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை அவர் கழற்றிக்கொடுத்துள்ளார். மேலும், வீட்டிற்குள் ஏதும் பணம் இருக்கிறதா என்று அந்த நபர்கள் தேடிக்கொண்டிருக்கும்போது அவர்களைத் தள்ளிவிட்டு பவித்ரா வெளியே ஓடிவந்துள்ளார். இதைக்கண்டதும் வெளியே நின்று கொண்டிருந்த மூன்று பேர் தப்பியோடிவிட்டனர்.
வீட்டிற்குள் இருந்த இரண்டு இளைஞர்கள் தப்பியோட முயற்சி செய்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை செய்ததில், பிடிபட்டவர்கள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரிஷி(20), சரவணன்(19) என தெரியவந்துள்ளது.
![சென்னை செய்திகள் மதுரவாயல் மசாஜ் சென்டர் மசாஜ் சென்டரில் நகைப் பறிப்பு chennai news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8607514_knief.jpg)
இவர்களிடமிருந்து நான்கு சவரன் நகை, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய மூன்று பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மசாஜ் சென்டரில் ஹைடெக் விபசாரம் - பெண் உள்பட இருவர் கைது