சென்னை: திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (எ) பாபு (27). இவரது தாயார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்.30) இவரது தாய்க்கு 16ஆம் நாள் காரியம் நடத்தப்பட்டது.
இதில், குமாரின் நண்பர்கள், உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர். அந்த வகையில், குமாரின் நண்பர்களான, அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27), அருண்குமார் (22) ஆகியோர் காரியம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அப்போது மூவரும் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அதே பகுதியிலுள்ள தினேஷ் குமாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர். இருப்பினும் இந்த பிரச்சினை முடிவுக்கு வராமலேயே இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் சதீஷ்குமாரும், அருண்குமாரும், நண்பர் குமாரின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அப்போது தினேஷ்குமாரும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அருண் என்பவர் காலணியை தூக்கி, தினேஷின் சாப்பாட்டின் மேல் போட்டுள்ளார்.
இதனால் அருண் மற்றும் தினேஷிற்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அருணிற்கு ஆதரவாக சதீஷ்குமாரும், தினேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து அருணின் மார்பிலும், சதீஷ்குமாரின் வயிற்றிலும் குத்தியுள்ளார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னை இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இருவரது உடலையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்து அவ்விடத்தில் இருந்து தப்பி தலைமறைவான தினேஷ் குமார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், தினேஷ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரணடைதுள்ளார். தினேஷ்குமாரிடம் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.