சென்னை - தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன அணிவகுப்பு செல்லும் பாதையில், வெடிகுண்டு நிபுணர்கள் வழக்கம்போல சோதனைப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் பயணிக்கும் வேன் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது சைதாப்பேட்டை நோக்கி, அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வெடிகுண்டு நிபுணர்களின் வேன் மீது மோதினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் எருக்கஞ்சேரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், கொடுங்கையூரைச் சேர்ந்த அருண் ஆகியோரே இருசக்கர வாகனத்தில் வந்து விபத்துக்குள்ளானது எனத் தெரிய வந்தது. விபத்தில் தமிழ்ச்செல்வனே உயிரிழந்துள்ளார் எனவும் காவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : தொழில்நுட்ப கோளாறு: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்!