சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறையின் சார்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அப்போது அவருடன் தீயணைப்புத்துறையின் டிஜிபி சைலேந்திரபாபு உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பாக முக்கிய கட்டடங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. உயரமான கட்டடங்கள் மீது 150 அடி உயரமுள்ள தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்படுகிறது.
முதலமைச்சர் தலைமையில் அனைத்து துறைகளும் இந்த அவசர காலத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. குறிப்பாக சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த அவசர காலத்தில் மக்கள் அனைவரும் தங்களை வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க தனியார் மருத்துவமனைகளும் படுக்கை வசதியை தருவதற்கு முன்வந்திருக்கின்றன. குறிப்பாக மியாட் மருத்துவமனை் 1500 படுக்கைகள், ராமச்சந்திரா மருத்துவமனை 800 படுக்கைகள், சவேதா மருத்துவமனை 500 படுக்கைகள் வழங்க முன் வந்திருக்கின்றன எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!