சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பார்க்கிங் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் காணாமல் போவரதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ணபிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பார்க்கிங்கில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் மாஸ்க் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை பார்த்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிப்பட்ட அந்த நபர் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முருகன்( வயது 36) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நாகர்கோவிலை சேர்ந்த முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குன்றத்தூரில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கி பைக் மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். அப்போது செலவுக்கு பணம் இல்லாத சமயத்தில் குன்றத்தூர் முருகன் கோயில் அருகே நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனத்தை திருடி அதை உடனடியாக பிரித்து விற்பனை செய்தது விசாரணையில் தெரிவித்துள்ளது.
ஆனால் ஒரு முறை கூட போலீசாரிடம் சிக்காத முருகனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செங்குன்றம் விளாங்காடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது முருகனின் மாமனார் அதே பகுதியில் அவருக்கு சொந்தமாக மெக்கானிக் கடை வைத்து கொடுத்துள்ளார்.
அதன் பின்னரும் திருட்டை கைவிடாத முருகன் பெயரளவுக்கு மெக்கானிக் கடை வைத்துக் கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எப்போதுமே பரபரப்பாக இயங்கும் பூக்கடை, சவுகார்பேட்டை, குன்றத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து பைக்குகளை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இரு சக்கர வாகனத்தை திருடியவுடன் அதை தனது மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்று மூன்று மணி நேரத்தில் எஞ்சின் மற்றும் இதர உதிரி பாகங்களை கழட்டி செட்டிமேட்டில் உள்ள தங்கபாண்டியன் என்பவரது இரும்பு கடையில் விற்று பணம் பெற்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஒரு வண்டியை பிரித்து விட்டால் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என முருகன் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை வீட்டில் கொடுத்துவிட்டு மீதி பணத்தை மது அருந்த பயன்படுத்தி வந்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களில் மட்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 இருசக்கர வாகனங்களையும், போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களையும் திருடி விற்பனை செய்துள்ளது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை திருட்டை அரங்கேற்றும் போதும், செங்குன்றம் என பெயர் அச்சிடப்பட்ட ஒரு கட்டப்பையை தொடர்ச்சியாக கையில் எடுத்து வருவதை போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்து அதனை துருப்பாக வைத்தே முருகனை கைது செய்துள்ளனர். முருகனை தொடர்ந்து திருட்டுக்கு உறுதுணையாக இருந்த தங்கப்பாண்டியனையும் கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவை பெண் கொலை வழக்கு... சூப் கடை உரிமையாளர் கைது; அம்பலப்பட்ட உறவு!