சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகுராஜா. இவர் வெளிநாடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு போய் கொடுக்கும் குருவியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அழகுராஜா சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
இந்நிலையில், சென்னை மண்ணடிக்கு வந்தத அவர் 30 லட்ச ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மன்றோ சிலை அருகே காக்கி சீருடையில் நின்றிருந்த இரு காவலர்கள் அழகுராஜாவை வழிமறித்து சோதனையிட்டு உள்ளனர்.
சோதனையில் அவரிடம் 30 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரை போலீசார் விசாரித்து உள்ளனர். பணத்திற்குண்டான ஆவணம் அழகுராஜாவிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அந்த காவலர்கள் இருசக்கர வாகனத்தில் விசாரணைக்காக அழகுராஜாவை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் முத்துசாமி பாலம் பகுதியில் அழகுராஜாவை இறக்கி விட்டு 30 லட்ச ரூபாய் பணத்துடன் காவலர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அழகுராஜா, இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து 30 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை பறித்து தப்பிச்சென்ற இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், ஆயுதப்படை காவலர் செந்தில் மற்றும் அவரது நண்பர் டைசன் என்பது தெரியவந்தது. மேலும் செந்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீஸ் எனக் கூறி ஹவாலா பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. மேலும் தலைமறைவான காவலர் செந்திலின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மெரினா கடற்கரையில் இன்னோவா கார் நூதன திருட்டு.