சென்னை: மெரினா கடற்கரையின் அருகே காமராஜர் சாலையில் அவ்வையார் சிலை எதிரே உள்ள அவ்வை சண்முகம் சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், கடற்கரை சாலைக்கு செல்ல முற்பட்டு திடீரென வலது புறமாக எந்த அறிகுறியும் இல்லாமல் திரும்பியுள்ளார். அப்போது காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், திரும்பி குறுக்கே வந்த அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் பின்னால் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வலதுபுறம் இருசக்கர வாகனத்தை திடீரென திருப்பி விபத்துக்குக் காரணமான நபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
தற்போது இந்த விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காயமடைந்தவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தேவ் சர்மா என்பதும், வண்டலூரில் தங்கி படித்து வரும் அவர், தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, மெரினா கடற்கரைக்கு வந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: அடிக்குறாங்க, அடிக்குறாங்க; நெல்லையில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி!
மேலும் உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என்பதும் சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன், ரத்தன் என்பதும் விடுமுறை தினத்தில் வெளியே சென்ற போது இந்த விபத்து நடந்ததுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இருவரது பிரேதபரிசோதனைக்குப் பிறகு உடலும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த தேவ்சர்மா என்பவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தை எதிர்திசையில் திருப்பியதால், இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரர்கள் பிரவீன், ரத்தன் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் மோதி, தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் அவர்கள் மீது இடித்து உயிர் இழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தேவ்சர்மா மற்றும் கார் ஓட்டுநர் அப்துல்சையது ஆகிய இருவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்துல் சையதை கைது செய்துள்ளனர். தேவ்சர்மா சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த விபத்து தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - டிஜிபி சைலேந்திரபாபு!