சென்னை: துபாயிலிருந்து சிறப்பு விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது திருச்சியைச் சோ்ந்த பெண் பயணி மீது சுங்கத் துறை அலுவலர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. அவரது உடமைகளைப் பரிசோதித்துப் பார்த்ததில், அதில் ஒன்றும் இல்லாததால், பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.
அதில், பெண் பயணி தனது உள்ளாடைக்குள் தங்க வளையல்கள் உள்ளிட்ட தங்கப் பொருள்களைக் கடத்திவந்ததைக் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அதைப் பறிமுதல்செய்த அலுவலர்கள், தங்க பொருள்களின் எடை 307 கிராம் என்றும், அவற்றின் சர்வதேச மதிப்பு 13 லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்தனர். மேலும் அந்தப் பெண்ணை கைதுசெய்து தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
அதேபோல் சாா்ஜாவிலிருந்து சிறப்பு விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினா் சோதனையிட்டனர்.
அப்போது சிவகங்கையைச் சோ்ந்த ஒரு ஆண் பயணி, அவருடைய ஆடைக்குள் மறைத்துவைத்திருந்த 357 கிராம் தங்கம், சூட்கேசில் மறைத்துவைத்திருந்த மின்னணுப் பொருள்கள், சிகரெட்களைப் பறிமுதல்செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு 16 லட்சம் ரூபாய் எனச் சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து அந்தப் பயணியையும் சுங்கத் துறையினர் கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து துபாய், சாா்ஜா ஆகிய இரண்டு விமானங்களில் வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் திருச்சி பெண் பயணி, சிவகங்கை ஆண் பயணி உள்பட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான 664 கிராம் தங்கம், சிகரெட்கள், மின்னணுப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: துபாய் டூ சென்னை விமானங்களில் 3 கிலோ தங்கக்கட்டி கடத்தல்!