சென்னை : புதிதாக ஆவடி மற்றும் தாம்பரத்தில் காவல் ஆணையர் அலுவலகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் காவல் ஆணையர் அலுவலகம் அமைக்கும் பணியானது நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி ரவி, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீர் ராய் ரத்தோர் மற்றும் ரவி ஆகியோர் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்?
1968ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த சந்தீப் ரத்தோர், 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராக தேர்வாகி தமிழ்நாடு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார். பரமக்குடி, நாகர்கோவில் மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாக பணியைத் தொடங்கியபோது சாதி கலவரங்களை சிறப்பாக கையாண்டு பாராட்டைப் பெற்றார். இதனைத்தொடர்ந்து எஸ்.பி.யாக திண்டுக்கல்லிலும் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக கோயம்புத்தூரிலும் பணியாற்றினார்.
![ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13199830_sandeep.jpg)
1998ஆம் ஆண்டு நடந்த கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது சிறப்பாக புலனாய்வு செய்து மூன்று குற்றவாளிகளை கைது செய்து பாராட்டைப் பெற்றார். கடந்த 1970ஆம் ஆண்டு முதல் மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து 30-க்கும் மேற்பட்ட கொலை செய்து வந்த சீரியல் கொலைகாரரான சார்லஸ் சோப்ராஜை 1986ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தபோது, சோப்ராஜ் பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்குவது போல் மயக்க மருந்தை கலந்து கொடுத்து தப்பித்துச் சென்றார்.
போக்குவரத்து சிக்னல்களில் எல்.இ.டி மின் விளக்குகள்
அதன்பின்னர் 1998ஆம் ஆண்டு சார்லஸை டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர். அப்போது தமிழ்நாடு காவல் துறை சார்பாக ரத்தோரை டெல்லி திஹார் சிறையின் கமாண்டண்ட்டாக பொறுப்பேற்றார். சார்லஸ் மீண்டும் தப்பிக்க இயலாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்தினார்.
![New coஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்p](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13199830_83_13199830_1632837708247.png)
1999ஆம் ஆண்டு மாநிலப் போதை பொருள் நுண்ணறிவு பிரிவுத் தலைவராகவும், சென்னை போக்குவரத்துத் துணை ஆணையராகவும் பணிபுரிந்த போது சென்னையில் முதன்முறையாக போக்குவரத்து சிக்னல்களில் எல்.இ.டி மின் விளக்குகளை அறிமுகப்படுத்தியவர், இவர் தான்.
அதனைத்தொடர்ந்து 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடு தொடர்பான அயல் பணியில் பணியாற்றினார். பின்னர் 2004ஆம் ஆண்டு தூத்துக்குடி எஸ்.பி.-யாக பணியாற்றியபோது இந்தியாவிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம், ஐ.எஸ்.ஓ தரசான்றிதழ் பெறுவதற்கு காரணமாக இருந்து பாராட்டைப் பெற்றுள்ளார்.
11 விருதுகளை பெற்றவர்
இதனைத்தொடர்ந்து ஒன்றிய அரசு பணியான சி.ஐ.எஸ்.எப், உள்துறை அமைச்சகத்தில் டி.ஐ.ஜியாவும், 2012 முதல் 2015 முதல் தேசியப் பேரிடர் மீட்புப்படையின் ஐ.ஜியாகவும் இருந்தபோது மவுலிவாக்கம் கட்டடம் இடிந்த விபத்து, நேபாள நிலநடுக்கம் போன்ற விபத்துகளில் சிக்கிய மக்களை அதி நவீன கருவிகளைப் பயன்படுத்தி பல உயிரைக் காப்பாற்றிய பெரும் பாராட்டைப் பெற்றார்.
அதன்பிறகு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ரத்தோர் சிறப்பு பணிகுழுவிலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலும், ரயில்வே பாதுகாப்புப் படை ஏடிஜிபியாகவும் ரத்தோர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
மெச்சத்தகுந்த பணிக்கான பிரதமர் விருது, சென்னை போலீஸ் விருது, இந்திய சுதந்திர தின விருது உட்பட 11 விருதுகளை சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுள்ளார்.
ரவி ஐ.பி.எஸ் கடந்து வந்த பாதை
1991ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அலுவலரான ரவி ஐ.பி.எஸ் சைபர் பாரன்சிக் மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவில் முதுகலைப் பட்டம் பயின்றவர். மதுரை வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மூலம் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
![ஏடிஜிபி ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13199830_60_13199830_1632839316960.png)
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஏ.எஸ்.பி-யாக தனது பணியைத் தொடர்ந்தார். தொடர்ந்து ஓசூர் ஏ.எஸ்.பியாக பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற குற்றச்செயல்கள் பலவற்றைத் தடுத்து நிறுத்தி பலரது பாராட்டையும் பெற்றார்.
சாதிக் கலவரத்தை தடுத்து நிறுத்தியவர்
பின் பதவி உயர்வு பெற்று பிரிக்கப்படாத நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக இவர் பணியாற்றியபோது பரபரப்பு நிறைந்த திருமதி.தங்கம் முத்து கிருஷ்ணன் கொலை வழக்கு குற்றவாளிகளை திறம்பட விசாரித்து கண்டறிந்ததோடு, நிகழவிருந்த பெரும் சாதிக் கலவரத்தைத் தடுத்து நிறுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
![ஏடிஜிபி ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-newcop-script-7202290_28092021170934_2809f_1632829174_891.jpg)
அதேபோல திருத்துறைப்பூண்டி, திருவாரூரில் நடைபெற்ற பரபரப்பான பல்வேறு சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னைகளை திறம்பட கையாண்டவர், ரவி ஐ.பி.எஸ் ஆவார். அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யாக இவர் பணியாற்றியபோது பெரும் சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் திண்டிவனத்தில் நடந்த அம்பேத்கர் சிலை சிதைப்புச் செயலை லாவகமாக கையாண்டு, அம்பேத்கர் சிலையைச் சுற்றி பூந்தோட்டம் அமைத்து பொது அமைதியை நிலைநாட்டினார்.
![ஏடிஜிபி ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-newcop-script-7202290_28092021170934_2809f_1632829174_402.jpg)
அதேபோல 10 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் ரவுடியிசத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி ஒருவரைத் திறமையான உளவுப் பிரிவை அமைத்து கைது செய்த பெருமையும் இவருக்கு உண்டு. அதனைத் தொடர்ந்து சேலம், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாகவும், சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜியாகவும், சென்னை தலைமையிட நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜியாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவருக்கு புதிய பதத்தை உருவாக்கியவர்
அதேபோல சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராகவும், சென்னை தலைமையிட கூடுதல் ஆணையராகவும், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சீனா, யூ.கே, யூ.எஸ்.ஏ, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இவர் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் சென்று அங்குள்ள காவல்துறையின் விசாரணை முறைகளைக் கற்று, அதை விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி காவல் நிலையங்கள் அமைத்து நடைமுறைப்படுத்தினார்.
![ஏடிஜிபி ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13199830_ra.jpg)
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் முறையை திறம்பட நடைமுறைப்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் தன்னார்வலர்களை இணைத்தார். அதேபோல விழுப்புரம் எஸ்.பி.யாக பணியாற்றியபோது மூன்றாம் பாலினத்தவரை "அலிகள்" என்றழைப்பதைத் தவிர்த்து "அரவாணி" என்று அழைக்க வேண்டும் என்ற புதிய பதத்தை உருவாக்கினார்.
அதை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து, தற்போது வரை மூன்றாம் பாலினத்தவரை "அரவாணி" அல்லது "திருநங்கை" என்றே குறிப்பிடப்படுகிறார்கள் என்பது அவரின் பெருமைக்குச் சான்றாக விளங்குகிறது. இவர்,சென்னை இணை ஆணையராக பணியாற்றியபோது வட சென்னைப் பகுதிகளில் கட்டுக்கடங்காமல் இருந்த ரவுடியிசத்தை ஒடுக்கி, முக்கிய ரவுடிகள் பலரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.
மேட்ரிமோனி மோசடி வழக்கு
அதேபோல அவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், வங்கிக் கடன்கள் கிடைக்க வழிவகை செய்தார். பின் சென்னை மாநகர போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக இவர் பணியாற்றியபோது மேம்பாட்டுத் திட்டங்களாக விளங்கும் இ-செல்லான் முறை மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கென ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுதினார்.
![ஏடிஜிபி ரவிஏடிஜிபி ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13199830_ravii.jpg)
இவரது திறமையான விசாரணை மூலம் மேட்ரிமோனி மோசடி மூலம் 200 இளம் பெண்கள் மற்றும் பெண்களை ஏமாற்றிய லியாகத் அலி கான் என்ற குற்றவாளியை கைது செய்தார். அதேபோல தங்க நகை மோசடியைத் திறம்பட கையாண்டு ஆயிரக்கணக்கான மக்களை பொருளாதாரச் சிக்கலில் இருந்து காத்தார்.
சென்னை காவல் துறையின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு "காவலர் நமது சேவகர்" என்ற தலைப்பில் குறும்படத்தை திரைக்கதை எழுதி, தயாரித்து நடிக்கவும் செய்தார். ஐ.பி.எஸ் பயிற்சி காலகட்டத்தின்போது உத்தரகாண்ட், முசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம்
அதேபோல ரிப்லக்ஸ் ஷுட்டிங்கிலும் இவர் பதக்கம் வென்றுள்ளார். 2008ஆம் ஆண்டு டேராடூனில் நடைபெற்ற அனைத்து இந்திய காவலர் பேட்மிண்டன் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறைக்குத் தலைமை வகித்து ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெள்ளி, தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்தவர்.
அதேபோல 2009ஆம் ஆண்டும் ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம், 2011ஆம் ஆண்டு போபாலில் நடைபெற்ற போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம், 2012ஆம் ஆண்டு நாகாலாந்துப் பகுதியில் நடைபெற்ற போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, 2013ஆம் ஆண்டு மணிபூரில் நடைபெற்ற போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களையும் இவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
![ஏடிஜிபி ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13199830_ravi-ips.jpg)
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்துப் பகுதியில் 16 ஆயிரத்து 500 அடியில் இருந்து துணிச்சலுடன் ஸ்கை-டைவிங் செய்தும் இவர் அசத்தியுள்ளார். இவரின் சிறந்த பணிக்குச் சான்றாக 2007ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம், 2016ஆம் ஆண்டு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.