சென்னை: சித்த மருத்துவர் ஷர்மிகா, தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அழகுக் குறிப்புகள் வழங்கி வந்தார். அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதைத் தொடர்ந்து அழகுக் குறிப்புகள் மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு மருத்துவக் குறிப்புகளையும் வழங்க தொடங்கினார். ஒரு மருத்துவர் என்பதைக் கடந்து, அவருக்கென சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் பிரபலமான நிலையில், அவரது சில மருத்துவக் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும் போன்ற அவரது மருத்துவக் குறிப்புகளை பலரும் கேள்வி எழுப்பினர். அவரது மருத்துவக் குறிப்புகள் அறிவியல் ரீதியாக தவறானவை என்றும், பார்வையாளர்களை கவர்வதற்காக இதுபோன்ற வீடியோக்களை அவர் வெளியிட்டு வருவதாகவும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சை வீடியோக்களில் சிலவற்றை தான் தவறுதலாக கூறிவிட்டதாக ஷர்மிகா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில், ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கடந்த ஜனவரி 24ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஷர்மிகா ஆஜராகி விளக்கமளித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்புகளை பின்பற்றியதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இதனால் மருத்துவர் ஷர்மிகாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த புகார்கள் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் இருப்பதாக சித்த மருத்துவக் கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே, வரும் 13ஆம் தேதி புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.