சென்னை: காசிமேட்டில் அவசரத்திற்கு போன் பேசிவிட்டு தருவதாகக் கூறி நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள வார்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த துரோபுதீன் என்ற இளைஞரிடம், அப்பகுதி வழியாக நடந்து வந்த இரு வாலிபர்கள் அவசரத்திற்கு போன் பேசிவிட்டு தருவதாகக் கூறி செல்போனை கேட்டுள்ளனர். அவசரம் என்று கூறியதனால், துரோபுதீனும் செல்போனை கொடுத்துள்ளார். ஆனால், ஒரு இளைஞர் மட்டும் போனில் பேசியபடி தப்பி ஓடியுள்ளார். தனது செல்போன் திருடப்பட்டது கண்டு மற்றொரு நபரை துரோபுதீன் பிடிக்க முயற்சித்த பொழுது, அவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் துரோபுதீன் புகார் அளித்தார். காசிமேடு காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் சோதனை செய்தபோது, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் ஆகிய இருவரும் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.