சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வழக்கறிஞர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக சங்கர் நகர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலையடுத்து அப்பகுதியை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது வழக்கறிஞர்கள் காவல்துறையினர் கண்ணில் சிக்காமல் தப்பித்தனர்.
ஒரு கட்டத்தில் காவல்துறையினரே ஒருவரை தயார் செய்து கஞ்சா வேண்டும் என வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். இதனையடுத்து அந்த நபருக்கு கஞ்சா கொடுக்க அங்கு வந்த இருவரை மறைந்திருந்த காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
அதன்பின் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, சதீஷ், ரெஜிவின்ஸ் என்பதும் இவர்கள் இருவரும் வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் நீண்ட நாள்களாக கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இரண்டு வழக்கறிஞர்களும் ஆந்திரா மாநிலம் கடப்பா, விசாகப்பட்டினத்தில் வழக்கறிஞராக படித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக உள்ளனர்.
கைது செய்யப்பட்ட சதீஷ், ரெஜிவின்ஸ் இருவரையும் காவல்துறையினர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது!