சென்னை பெருங்குடி மண்டலத்தில் மைக்ரோ மேலாண்மை திட்டத்தின் (division level micro plan) கீழ் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி களப்பணியாளர்கள், அலுவலர்களுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டுமென என ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று அறிவுரைகள் வழங்கினார். அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமினை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் சென்னையில் உள்ள 200 வார்டுக்கும் துணை பொறியாளர், வார்டு தலைமை அலுவலர், சுகாதார அலுவலர், வருவாய்த்துறை அலுவலர் என தனித்தனியாக பணியமர்த்தப்பட்டு மைக்ரோ மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இது மட்டுமின்றி ஒரு வார்டுக்கு ஒரு மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என உதவி பொறியாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். முதலில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்குத் தேவையான உதவி செய்வது போன்ற பணிகளில் சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர்களும் ஈடுபடுவார்கள்.
அடுத்ததாக, வருவாய்த்துறை அலுவலர் தலைமையில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டை தனிமைப்படுத்தியுள்ளோம். அந்த வீட்டில் இருக்கும் நபர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களை நியமித்து உள்ளோம். அந்த தன்னார்வலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்கித் தருவது போன்ற உதவிகளை செய்து வருவார்கள் இதை அனைத்தும் வருவாய்த்துறை அலுவலர் தினமும் ஆய்வு மேற்கொள்வார்.
கரோனா உறுதிசெய்யப்பட்டவரின் தெருவை கிருமிநாசினி தெளிப்பது, ப்ளீச்சிங் பவுடர் போடுவதும் போன்ற பணிகளை தூய்மைப்பணியாளர்கள் செய்வர். மேலும் வார்டுகளில் நடைபெறும் மருத்துவ முகாம்கள் அனைத்தும் அந்த வார்டில் பணியமர்த்திய மருத்துவர் மேற்பார்வையில் நடைபெறும். வீடு வீடாக சென்று பரிசோதனை செய்பவர்கள் யாருக்கேனும் அறிகுறி இருந்தால் நேரடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மாலை 4 மணிக்கு வார்டு அலுவலத்தில் ஒன்றிணைந்து அன்றைய நாளில் என்னென்ன பணிகள் நடைபெற்றன என்பதை வரிசைப்படுத்துவார்கள். அதில் ஏதாவது குறையிருந்தால் உதவி பொறியாளர் தலைமையில் அது சரிபார்க்கப்படும். இந்த பணிகள்தான் மைக்ரோ மேலாண்மை திட்டத்தின் (division level micro plan) கீழ் நடைபெற்று வருகிறது.
இந்தப் பேரிடர் காலத்தில் யார் என்ன பணிகள் செய்வது என குழப்பம் இருக்கும். எனவே இந்த மைக்ரோ மேலாண்மை திட்டம் மூலம் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என தெளிவாக பணியாளர் மற்றும் அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளோம். மேலும், களப் பணியிலிருக்கும் பணியாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் வாட்ஸ்அப் குரூப் ஒன்றே உருவாக்கியுள்ளோம்.
கரோனா பாதிக்கப்பட்டவரின் உடனிருந்தவர்கள், மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள், வெளிநாடுகளிலிருந்து வீடு திரும்பியவர்கள் என 18 வகையாக பிரித்து 2 லட்சத்து 75 ஆயிரத்து 869 நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: காட்டு ராஜாக்களை அழிப்பது காட்டை துண்டாடுவதற்கு சமம்!