சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் நாடியுள்ள நிலையில், இதற்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தை நாடும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
நேற்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதிமுக குறித்து பல விவகாரங்களை விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (செப்.21) காலை 2,500க்கு மேற்பட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் உறுதி மொழி பத்திரங்களை முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் சுய விருப்பத்துடனும், முழு மனதுடனும் இந்த உறுதிமொழி பத்திரத்தை கொடுப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கில் சேர்ப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
ஒருவேளை உச்ச நீதிமன்றம் ஈபிஎஸ் தரப்பிற்கு முரணாக தீர்ப்பளிக்கும் பொழுது, இந்த கடிதத்தை ஒரு வாதமாக எடுத்து வைப்பதற்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்