சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பரை, கடந்த மாதம் 17ஆம் தேதி கடத்திச் சென்று ரூபாய் இரண்டு கோடி ஹவாலா பணத்தை, பயங்கரவாதி தவ்பீக் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக உமா மகேஷ்வரன், ஆல்பர்ட், பிலால், காதர், அப்துல் ரியாஸ், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்த சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், ஷேக் ஆகியோரையும் முத்தியால்பேட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில், கைதான நபர்கள் பயன்படுத்திய சிம்கார்டுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிம் கார்டுகள், போலி ஐடியில் வாங்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கடத்தல்காரர்கள் தொழிலதிபரை கடத்தி அவரின் வீட்டில் உள்ளவர்களிடம் செல்போனில் பேசி, பணத்தை கேட்டு மிரட்டிவந்தனர். அதில் ஒரு சிம் கார்டு நம்பர், தனிப்படை காவல் துறையினருக்கு கிடைத்தது.
ஆனால், அந்த சிம் கார்டு ராயபுரத்தைச் சேர்ந்த மோனிஷா(25) என்ற பெண்மணியின் பெயரில் இருந்தது. இதனையடுத்து அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டத்தில், அவருக்கே தெரியாமல், அவரின் ஆதார் அட்டை நகலை பயன்படுத்தி, 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி, அதை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருந்தது தெரியவந்தது.
பின்னர், மோனிஷாவை விடுவித்த தனிப்படை காவல் துறையினர் அவரிடம் ஒரு புகாரை வாங்கி, இது தொடர்பாக தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்தனர். இந்த சிம் கார்டுகள் அனைத்தையும், புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த அர்ஜூன் செயல்பட வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அர்ஜூன் தனியார் சிம் கம்பெனி ஒன்றில், விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தபோது காசிமேடு, ஜீவரத்தினம் சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில், சிம் கார்டுக்காக , மோனிஷா கொடுத்த ஆதார் அட்டை நகலை திருடி அதன்மூலம் 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை செயல்பட வைத்து, விற்பனை செய்துள்ளார். அதை ஒரு கும்பல் வாங்கி, கடத்தல்காரர்களுக்கு, கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மோசடி கும்பலான பெரம்பூரைச் சேர்ந்த பிரேம நாதன்(31), சூளையைச் சேர்ந்த அமர் ஜெயின்(41), மண்ணடியைச் சேர்ந்த முகமது அசின்(51), ராயபுரத்தைச் சேர்ந்த காசின் நிவாஸ்(34), மற்றும் அர்ஜூன் உள்பட ஐந்து பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.