சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவராஜபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் காஞ்சனா (24). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக காஞ்சனா, கடந்த ஆறு மாதமாக வேலை இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த காஞ்சனா வீட்டில் கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் பட்டாபிராம், சத்திரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (29) பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவரும் கடந்த ஆறு மாதமாக வேலையில்லாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.
இதனையடுத்து மனமுடைந்த பால்ராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.