சென்னையில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தூங்கி கொண்டிருந்தபோது, அதிகாலையில் வீட்டினுள் நுழைந்த மூன்று பேர், கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகார் தொடர்பாக காவல் துறையினர் 376(2)(1)(k) பாலியல் வன்கொடுமை, 307-கொலை முயற்சி, 450 அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் டிபி சத்திரத்தைச் சேர்ந்த ரவுடி லிங்கம், ஆனந்த், ராஜ்குமார் என்பது தெரியவந்தது. ஆனால் இவர்கள் மூவரும் காவல் துறையினரிடம் பிடிபடாமல் இருந்தனர்.
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனிடையே தினசரி நாளிதழ்களில் செய்திகள் வெளியானதை கண்டு மாநில மனித உரிமை ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து மூன்று வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்ய வலியுறுத்தி இன்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக டிபி சத்திரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆனந்த் ஆகியோரை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவலர்கள் கைது செய்தனர்.
இதைத்தொடரந்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக இருவரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறகு இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி லிங்கத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண்ணை ஏமாற்றிய கட்டடத் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை!