சென்னை: ராயப்பேட்டை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனியார் ஏடி.எம் மையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருவர் நின்றிருப்பதாக ரோந்து காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ராயப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏடிஎம்மில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை சோதனை செய்த போது அவர்கள் பையில் 20.30 லட்ச ரூபாய் பணம் இருந்ததை கண்டு பிடித்தனர்.
மேலும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த நூர் முகமது(38), ரைசுல்ஆஷிக்(25) என தெரியவந்தது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 20.34 லட்ச ரூபாய் அஸ்லாம் பாய் என்பவருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட நூர் முகமது அஸ்லாம் பாய் என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருவதும், அஸ்லாம் பாய் கொடுக்கும் பணத்தை பல்வேறு ஏடி.எம்மில் பிரித்து டெபாசிட் செய்யும் பணியை நூர் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதே போல அஸ்லாம் கொடுத்த பணத்தை ஏடி.எம்மில் டெபாசிட் செய்ய வந்த போது போலீசில் பிடிபட்டனர். பணத்திற்குண்டான ஆவணங்கள் இல்லாததால் ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் இது குறித்து வருமான வரி புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததுடன் இருவரையும் பறிமுதல் செய்த பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பணத்தின் உரிமையாளரான அஸ்லாம் பாயிடம் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக பாஜகவின் பி டீம் இல்ல... அவங்கதான் மெயின் டீம் - சீமான்