சென்னையில் அம்பத்தூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் வீடு, கடைகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்து, பொதுமக்கள் சார்பில் காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் பரணிதரன், எஸ்ஐ முத்துராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கொள்ளை நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, கொள்ளை செயலில் ஈடுபட்டது அம்பத்தூர் அடுத்த பாடி புதுநகர், கலைவாணர் காலனியைச் சேர்ந்த அருண் (23), அவரது நண்பர் சிவா (22) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதன் பிறகு, காவல் துறையினர் தலைமறைவாக இருந்த இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்
பின்னர், அவர்கள் இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் அம்பத்தூர் பகுதிகளில் கடை, வீடுகளை உடைத்து தங்க நகைகள், செல்போன் ஆகியவற்றை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 6 சவரன் தங்க நகைகள்,50,000 மதிப்புள்ள இரண்டு விலை உயர்ந்த செல்போன் மற்றும் கொள்ளை செயலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து, அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.