சென்னை தரமணி பாரதி தெருவில் வசித்து வருபவர் வள்ளி (55). இவரது மகன் முருகேசன். பட்டதாரியான இவருக்கு, தாயார் வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில், மலேசியாவில் மின்துறையில் துறையில் பணி இருப்பதாகக் கூறி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரம் ஒன்றை தாயார் வள்ளி பார்த்துள்ளார்.
வங்கி கணக்கில் பணம் செலுத்தல்
அந்த விளம்பரத்தில் வந்த தொலைபேசி எண்ணிற்கு வள்ளி தொடர்பு கொண்டு பணி குறித்து விசாரித்துள்ளார். அதில் பேசிய நபர் மகனின் பாஸ்போர்ட், ஆவணங்களை தயார் செய்வதற்கு, 47 ஆயிரம் ரூபாய் செலவாகும் என தெரிவித்துள்ளார். அதை நம்பிய வள்ளி 47 ஆயிரம் ரூபாயை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் நீண்ட நாள் ஆகியும் வேலை கிடைக்காததால் சந்தேகம் அடைந்த வள்ளி அந்த நபரின் எண்ணிற்குத் தொடர்பு கொண்டபோது "சுவிட்ச் ஆப்" ஆகியுள்ளது.
காவல் நிலையத்தில் புகார்
தான் ஏமாந்ததை உணர்ந்த வள்ளி உடனடியாக அடையாறு மத்திய குற்றப்பிரிவில், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரின் செல்போன் எண், வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தினர்.
இருவர் கைது
அதில், கடலூர் பகுதியைச் சேர்ந்த சிவா, மணிமாறன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை காவல் துறையினர் கடலூருக்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2012ஆம் ஆண்டு டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்ததும், சங்கரா தேவி கன்சல்டன்சி என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்ததும், வெளியூரிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, கமிஷனை வங்கி கணக்கில் செலுத்தச் சொல்லி பொது மக்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
ஆவணங்கள் பறிமுதல்
இதையடுத்து, அவர்களிடமிருந்து பாஸ்போர்ட், கார், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி!