சென்னை: அதிமுக தேர்தல் பிரிவு இணை செயலாளரும் வழக்கறிஞருமான இன்பதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், "சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் மீது பொய்யான குற்றச்சாட்டின் மூலம் புகார் அளித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடந்த 21 ஆம் தேதி கூட்டம் கூட்டப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் கடந்த 20 ஆம் தேதி இரவு பவானியில் உள்ள கோயிலுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தனது தரப்பு கவுன்சிலர்களான மஞ்சுளா, பூங்கொடி, காவேரி மற்றும் சங்கீதா ஆகியோருடன் சென்று வழிபட்டுவிட்டு சேலம் நோக்கி திரும்பினார்.
அப்போது குமாரபாளையம் அருகே இரு கார்களில் வந்த கும்பல் வழிமறித்து கவுன்சிலர்களான சங்கீதா மற்றும் பூங்கொடி ஆகிய இருவரையும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஆய்வாளர் சந்திர குமார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.
அதன் பின்னர் மறுநாளான 21 ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற கூட்டப்பட்ட கூட்டத்தை பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் புறக்கணித்துவிட்டு வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜமுத்து, ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயசங்கரன் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கடத்தப்பட்ட ஜெகநாதன் தரப்பு பெண் கவுன்சிலர்களை கடத்தல் கும்பல் கத்தி முனையில் மிரட்டி நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டத்தில் ஆஜர்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். அதன்பின் கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்கள் இருவரும் தனித் தனியாகத் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்ணீர் மல்க தாங்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விவரித்தனர்.
எனவே பெண் கவுன்சிலர்களை கடத்திச் சென்ற கடத்தல் கும்பலை கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெண் கவுன்சிலர்கள் தன்னிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ பதிவுகளை புகாரில் இணைத்துள்ளேன். பெண் கவுன்சிலர்கள் கடத்தல் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது கண்டனத்துக்கு உரியது.
இந்த சம்பவத்தில் பிரபல ரவுடியான சுரேஷ் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. பாரப்பட்டி சுரேஷ் மீது 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் இருக்கிறது. பெண் கவுன்சிலர்கள் பேசிய ஆடியோ பதிவை ஆதாரமாக டிஜிபி-யை சந்தித்து புகார் அளித்துள்ளோம்" என்று இன்பதுரை தெரிவித்தார்.
இதையும் படிக்க:தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டண உயர்வு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்