சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி, 17 பேரிடம் சுமார் 88 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் தனியார் சட்டக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் வடபழனியைச் சேர்ந்த சாந்தி (45), திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பக்தவத்சலம் (43) ஆகிய இருவரும் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், மோசடி செய்த பணத்தில் வாங்கி குவித்த தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பென்சன்தாரர்களின் வங்கிக் கணக்கை வைத்து ரூ.47.7 லட்சம் மோசடி செய்த ஆசாமிகள் கைது