சென்னை: கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் 15 வயது மகள், ஆயிரம்விளக்கு பைக்ராஸ் கார்டன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் பள்ளியில் இருந்து வெளியே வரும்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பள்ளி மாணவியை நிறுத்தி, 'தான் உன் தாயாரின் தோழி' எனக் கூறி, ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் மாணவி பள்ளி முடிந்து எப்போதும் வேனில் தான் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அதைபோல வேன் ஓட்டுநர் கணேசன் என்பவர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது மாணவியைக் காணவில்லை. இதைடுத்து மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து, பள்ளி முடிந்தும் மாணவி வேனிற்கு வரவில்லை எனக் கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்குச்சென்று, மகளைத் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், பள்ளி முதல்வரிடம் விசாரித்தனர்.
அப்போது மாணவியின் தந்தைக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய பெண் ஒருவர், 'உன் மகளைக் கடத்தி வைத்துள்ளேன். 10 லட்சம் ரூபாய் தந்தால் நான் விட்டு விடுவேன்' எனக் கூறி மிரட்டிவிட்டு, இணைப்பைத்துண்டித்துவிட்டார். இதனால் பயந்து போன மாணவியின் தந்தை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை காவல் துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிரத்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆட்டோவில் வைத்து மாணவி கடத்தல்: பணம் கேட்டு மிரட்டிய பெண்ணின் செல்ஃபோன் எண் சிக்னலை வைத்து சைபர் பிரிவு அதிகாரிகள் மூலம் கண்காணித்து பின் தொடர்ந்தனர். மேலும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து எந்த ஆட்டோவில் மாணவி கடத்தப்பட்டார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தந்தைக்கு மீண்டும் செல்ஃபோனில் தொடர்புகொண்ட கடத்தல் பெண், “உங்களுக்கு அரைமணி நேரம் தான் உள்ளது. கேட்ட பணத்தை கொடுக்க வேண்டும்” என மிரட்டினார். அதற்கு தன்னிடம் 2 லட்சம் ரூபாய் தான் இருப்பதாக மாணவியின் தந்தை கூறினார். தொடர்ந்து, பணத்தைக்கொடுக்க வேண்டிய இடத்தை சொல்லிவிட்டு, அப்பெண் செல்ஃபோன் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
உடனடியாக அப்பெண் கூறிய இடத்திற்குச் சென்று சுற்றி வளைத்துவிடலாம் என காவல் துறையினர் திட்டம் தீட்டினர். இதற்கிடையில் கடத்தல் பெண், மாணவியை ஆட்டோவில் வைத்து சுற்றிக்கொண்டிருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். மீண்டும் தொடர்பு கொண்டு கடத்தல் பெண், மாணவியின் தந்தையை பணத்துடன் ஆழ்வார்ப்பேட்டை பகுதிக்கு கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். அங்கு சென்றதும் கோடம்பாக்கம் பகுதிக்கு வருமாறு அப்பெண் அலைக்கழித்துள்ளார்.
காவல் துறையிடம் சிக்கிய கடத்தல் பெண்: பின்னர், பேசிய அந்த பெண், வடபழனி 100 அடி சாலையிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிரே இருக்கும் பர்னிச்சர் கடையில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக்கொடுத்துவிட்டு மகளை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி பர்னிச்சர் கடையிலுள்ள ஒருவரிடம் மாணவியின் தந்தை பணத்தை கொடுத்தார். பின்னர், அவருக்கு தொடர்புகொண்ட கடத்தல் பெண், தங்கள் மகள் வடபழனி சிக்னல் அருகில் நின்று கொண்டிருப்பதாகக்கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
உடனடியாக காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தந்தை, சாலையோரமாக நின்று கொண்டிருந்த மாணவியை மீட்டனர். தந்தையைக்கண்டதும் மாணவி கட்டித்தழுவி கண்ணீர்விட்டுள்ளார். கடத்தலால் அதிர்ச்சியில் இருந்த மாணவிக்கு காவல் துறை சமாதானப்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பர்னிச்சர் கடையில் தந்தையிடம் இருந்த பணத்தைப் பெற்ற நபரை காவல் துறையினர், பிடிக்க கடையின் வெளியே காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் கடைக்குள் பர்தா அணிந்தபடி ஒரு பெண் செல்வதை காவல் துறையினர் கண்டனர். அவரை நோட்டமிட்டதில் அவர் கடையின் உரிமையாளரிடம் இருந்த பணத்தைப்பெறுவது தெரியவந்தது. உடனடியாக அப்பெண்ணை சுற்றிவளைத்த காவல் துறையினர், அவரையும், அவருக்கு உடைந்தையாக இருந்த கடை உரிமையாளரையும் கைது செய்தனர்.
கடனை அடைக்க கடத்தல் தொழில்: இருவரையும் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட பெண் ராயப்பேட்டையைச் சேர்ந்த மொஹசினா பர்ஹீன் (34) என்பது தெரியவந்தது. மாணவியின் தந்தையிடம் பணத்தை வாங்கியது பர்னிச்சர் கடையின் உரிமையாளர் இஜாஸ் அகமது (52) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டுள்ள மொஹசினா பர்ஹீன் ராயப்பேட்டை பகுதியில் மழலையர் பள்ளி நடத்த திட்டமிட்டு அதற்காக 10 லட்சம் ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கியுள்ளார். ஆனால், கரோனா காரணமாக மழலையர் பள்ளி திறக்கமுடியாததால் 10 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதால், கடனை கட்டுவதற்காக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொஹசினா பர்ஹீன் அவர் வசிக்கும் பகுதியைச்சேர்ந்த அவரது உறவினரின் மகளை கடத்த திட்டமிட்டிருந்ததும், ஆனால் பள்ளிக்கு அருகில் சென்றதும் வேறொரு மாணவியை கடத்திச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
அந்த பள்ளியில் படிக்கக்கூடிய சிறுமிகள் அனைவரும் பணக்காரர்கள் என்பது தெரியவந்ததால் வேறொரு மாணவியை கடத்தியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
காவல் துறை தீவிர விசாரணை: மொஹசினா பர்ஹீனின் சகோதரர் தான், வடபழனியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார். இதனால் அடிக்கடி அந்த கடைக்குச்சென்று வந்ததால் கடையின் உரிமையாளர் இஜாஸூக்கு நன்கு பழக்கம். இதனால் தான் பணத்தை இஜாஸிடம் கொடுக்க வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, இந்த கடத்தலில் மொஹசினா பர்ஹீன் சகோதரருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் தொடர்பு இருக்கிறதா? என காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி கடத்தப்பட்டு 3 மணி நேரத்தில் காவல் துறையினர் அதிதீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி, மாணவியை சாதுர்யமாக மீட்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்த தனிப்படை காவல் துறையினரை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் கண்டுபிடிப்பு!