அமெரிக்கா, இத்தாலி, ஈரான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாளை மக்கள் தாங்களாக முன்வந்து ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அரசியல்வாதிகள், நடிகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஊரடங்கைப் பின்பற்ற மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நடிகர் ரஜினிகாந்த்தும் இன்று பிற்பகல் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், மக்கள் ஊரடங்கை 14 மணி நேரம் கடைப்பிடித்தால், இந்தியாவில் இரண்டாம் கட்ட நிலையிலுள்ள கரோனா தொற்றானது மூன்றாவது நிலையை அடையாமல் தடுக்க முடியும் என்று அவர் பேசியிருந்தார். இந்நிலையில், அவரின் கருத்து தங்களது விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி ட்விட்டர் நிர்வாகம் அவரின் வீடியோ பதிவை நீக்கியது. இது ரஜினியின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீக்கப்பட்ட அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியது என்ன? - முழு விவரம் இதோ!