சென்னை: நடிகர் ஆர்யா சமூக வலைதளம் மூலமாக தன்னிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ரூ.70 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.
இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 10 ஆம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
ஜெர்மனி பெண்ணிடம் மோசடி
இதனையடுத்து கடந்த 24 ஆம் தேதி ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை மத்திய குற்றபிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கிற்கும் நடிகர் ஆர்யாவிற்கும் தொடர்பில்லை எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கைதான இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது இன்று (செப்.1) விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து காவல்துறை பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதனையடுத்து ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் 3 மற்றும் 4 ஆவது குற்றவாளி. முதல் குற்றவாளியாக நடிகர் ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஜெர்மனி பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யா மீது மோசடி புகார் அளித்தார். ஆனால் நடிகர் ஆர்யா தன்னை போல நடித்து ஏமாற்றியதாக கைதானவர்கள் மீது ஒரு புகாரும் அளிக்கவில்லை.
ஜெர்மனி பெண்ணிடம் நடிகர் ஆர்யா வீடியோ காலில் பேசிய அனைத்து ஆதாரங்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறோம். நடிகர் ஆர்யா பேசிய அனைத்து குறுஞ்செய்திகளையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளோம்.
நடிகர் ஆர்யா தனது செல்போன் எண்ணில் ஜெர்மனி பெண்ணிடம் பேசி, நட்சத்திர அந்தஸ்தில் தான் இருப்பதால் தனது மேலாளர் முகமது அர்மான், ஹூசைனி வங்கி கணக்கில் பணத்தை பெற்ற ஆதாரங்களும் உள்ளன. உடனடியாக ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" என்றார்.
நடிகர் ஆர்யாவிற்கு தொடர்பில்லை
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் கேட்ட போது, "புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயார் ஜமீலா ஆகியோர் மீது முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்தோம். பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யாவிற்கு தொடர்பில்லை எனத் தெரியவந்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் போது ஆர்யாவின் பெயர் நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆர்யா மோசடி வழக்கில் திருப்பம்
மத்தியகுற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை செய்த பின்பே நடிகர் ஆர்யா உள்பட 4 பேர் மீது கடந்த 19 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 23ஆம் தேதி இருவர் கைது செய்யப்பட்டவுடன் ஆர்யாவிற்கு வழக்கில் சம்மந்தமில்லை என காவல் துறையினர் தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'தலைவி' வெளியாவதில் திடீர் சிக்கல்!