Chennai IIT: சென்னை: ஐஐடியில் ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் சாரங் திருவிழா நாளை முதல் 15ஆம் தேதி வரை கரோனா தொற்றுக்குப் பின்னர் நேரடியாக நடைபெறுகிறது. இந்த சாரங் திருவிழாவில் நூறு போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சார்ந்த 80,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும் பொழுது, 'மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாரங் திருவிழா நடைபெறுகிறது. 28ஆவது சாரங் திருவிழா நாளை முதல் ஐந்து நாட்கள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா முழுவதும் இருந்து 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன்மூலம் அனைவருக்கும் ஐஐடி என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 'சுத்தம்' குறித்த குறுந்தகடும்(CD) வெளியிடப்பட்டுள்ளது. கலைத் திருவிழாவில் தாய்மொழி குறித்து பேச்சுப்போட்டிகள் உள்ளன. பொங்கல் திருவிழா குறித்து எந்த நிகழ்ச்சியும் இந்த ஆண்டு நடைபெறவில்லை' என்றார்.
சென்னை ஐஐடியில் பொங்கல் விழா இதுவரை கொண்டாடியது இல்லை; வரும் ஆண்டில் கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கு பெறுவதால், அவர்களுக்கு தொழில் திறன் குறித்து விழிப்புணர்வும் ஏற்படும் என்றும்; பொதுமக்கள் பார்வையிட வந்தால் அவர்களுக்கு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு தொகுதி காலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!