சென்னை புறநகா் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமானநிலையத்திற்கு வர வேண்டிய பயணிகள், விமானிகள், ஊழியர்கள் போன்றவர்கள், வருவதில் மிகுந்த கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள் புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிராங்க்பாா்ட், பிரான்ஸ், துபாய், தோகா, சார்ஜா, கத்தாா், இலங்கை, கோலாலம்பூர், சிங்கப்பூர் உட்பட 12 பன்னாட்டு விமானங்களும் மும்பை, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, விஜயவாடா, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்குச்செல்லும் 16 உள்நாட்டு விமானங்களும் 15 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், சென்னைக்கு வரும் விமானங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் வந்து தரை இறங்குகின்றன. சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் மட்டும் காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்று விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்த போது, விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணிப் பெண்கள் போன்ற ஊழியர்கள் ஓட்டல்களில் இருந்து போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக தாமதமாக வருகின்றனர்.
மழை பெய்து கொண்டிருப்பதால் பயணிகளின் உடைமைகளை விமானத்தில் கொண்டு போய் ஏற்றுவது, பயணிகளுக்குத்தேவையான உணவுகளைக்கொண்டு சென்று விமானங்களில் ஏற்றுவது, விமானங்கள் பராமரிப்பு போன்ற பணிகளும் காலதாமதம் ஆகின்றன. இதனால் தான் விமானம் தாமதம் ஆவதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: கனமழையினை திறம்பட எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்