சென்னை: வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலா தலங்களான இமாச்சலப் பிரதேசம் உட்பட பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த 12 கல்லூரி மாணவர்கள், இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று சிக்கியிருப்பதாக மாணவரின் தந்தையான சீனிவாசன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் ஹரிஹரன். இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் கட்டட கலை பற்றிய படிப்பு படித்து வருகிறார். தற்போது ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர்கள் 11 பேர் இணைந்து திட்டமிட்டு இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதில் நான்கு பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 1ஆம் தேதி ரயில் மூலமாக டெல்லிக்குச் சென்று அங்கிருந்து ஏஜென்ட் மூலமாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்குச் சென்று 12 மாணவர்கள் சுற்றிப்பார்த்தனர். அதன் பின்னர் கடந்த 9ஆம் தேதி டெல்லிக்கு புறப்படுவதாக தெரிவித்துள்ளனர். அங்கு மிக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரம் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுவிட்டது. இதனால் மகனின் செல்போன் எண் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது தந்தை ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இமாச்சலப் பிரதேச வெள்ளத்தில் சிக்கி கொண்டாரா? என்ற அச்சம் இருப்பதால் உடனடியாக தனது மகனை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் செல்போன் எண்ணை வைத்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் குழு மற்றும் மண்டி ஆகிய மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு மாணவர்களின் நிலைமைப் பற்றி கேட்கப்பட்டது.
மேலும், இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மைத்துறையினர் மிக கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது என்றும்; 12 தமிழ் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று (ஜூலை 11 ) இரவு மாணவன் ஹரிஹரன் அவரது தந்தையான சீனிவாசனுக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் இமாச்சலப் பிரேதசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் வாகனம் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், இதனால் குழுமனால் பகுதியில் 2 நாட்களாக சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும்; தற்போது மீட்புப்படையினர் நிலச்சரிவு இடர்பாடுகளை அகற்றிய பின்னர் சண்டிகர் வழியாக வந்து கொண்டிருப்பதாக குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார். இதனை கண்டு மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க:Vijay: 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை தொடங்குகிறார் விஜய்!