சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், வழக்கை முடித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கில், தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை முடித்து வைத்த உத்தரவையும், புலன் விசாரணை பிரிவு அறிக்கையையும் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஆணையம் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹென்றி திபேன் ஆஜராகி, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, உயிரிழந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது என போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டபோதும், அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்தார். விதிகளை மீறி மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஆணையம் தரப்பில், புதிதாக ஏதும் ஆதாரங்கள் இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம் என உத்தரவிடபட்டுள்ளதாகவும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் வாதிடப்பட்டது.
பின்னர், சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை ஆகியவை அரசுக்கு கிடைத்துள்ளதா? இல்லையா? என விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அறிக்கை கிடைத்திருந்தால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கள் நீதிமன்றத்துக்கு களங்கம் விளைவிக்கவில்லை’ - சவுக்கு சங்கரின் வழக்கை நிராகரித்த தலைமை வழக்கறிஞர்!