தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் செலவிணங்களை அரசே ஏற்கும் வண்ணம், குறிப்பிட்ட ஒரு தொகையை நிர்ணயம் செய்து அரசு வழங்கி வந்தது.
இந்நிலையில், அரசு வழங்கி வந்த கல்விக் கட்டணத்தை பாதிக்கும் கீழாக குறைத்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் புதிய கட்டணம் தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளார்.
வசதி இல்லாத காரணத்தால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோரின் நிலையை உணராமல் தமிழ்நாடு அரசு எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்திருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் செயல் என்றும், உடனடியாக இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.