தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றுடன் (மே 22) இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
இந்த துயரச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் போன போதிலும், மக்கள் மனதில் நீங்காத நினைவுகள் தொடர்கின்றன. இந்த ஆண்டு கரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பொது அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்ட ட்விட்டரில், "தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். 'மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வார்த்தைகளை மறந்து நிகழ்த்தப்பட்ட இந்த வெறியாட்டம் நடந்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன.
ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை, 'தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்பதை உணர்ந்து தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உடனே கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும். ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் என்றைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்கும் என்ற உறுதியை அளித்து, உயிரிழந்தவர்களுக்கு இரண்டாமாண்டு நினைவு தினத்தில் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு தினம்: பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 1,000 போலீசார்!