தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது டிடிவி தினகரனை கடுமையான வார்த்தைகளால் தாக்கிப் பேசினார். அவர், ”டிடிவி தினகரனை நம்பித்தான் கட்சி ஆட்சி அத்தனையும் ஒப்படைத்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்றார்.
ஆனால் அதனை ஒரே மாதத்தில் கூத்தாடி கெடுத்துவிட்டார். கூவத்தூரில் அனைவருக்கும் மது ஊற்றிக்கொடுத்து குடியை கெடுத்தவர் டிடிவி தினகரன்தான். அவரால் இல்லை என்று மறுக்க முடியுமா? அவரது குல தொழிலே ஊற்றிக்கொடுப்பதுதான்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து, மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்!” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மக்களின் குறைகளை கேட்கிறது - கனிமொழி