கரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் மாநகரில் மதுக்கடைகளைத் திறப்பது மோசமான முடிவாக அமையும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நாளை (ஆக. 18) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவு.
தலைநகர் சென்னையில் தொற்று பாதிப்பு குறைவதாகத் தெரிந்தாலும், கடந்த சில நாள்களாக பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. உயிரிழப்பு விகிதமும் குறையாமலே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கவிருப்பது முற்றிலும் தவறானது .
இ- பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்த பிறகும் அதனை ரத்து செய்தால் கரோனா பரவல் அதிகரிக்கும் என்று காரணம் கூறி வரும் அரசு, இப்போது மதுக்கடைகளை திறந்துவிட மட்டும் எப்படி முடிவெடுத்தது என்று தெரியவில்லை.
சென்னைக்கு வெளியே ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த தொற்றுப் பரவல், மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பிறகுதான் வேகமெடுத்தது என்பது தெரிந்தும் இப்படி ஒரு முடிவெடுப்பது துளியும் மனசாட்சியற்ற செயல். மக்கள் நிலையைக் கருத்தில் கொள்ளாமல், அரசுக்கு வருமானம் கிடைத்தால் போதும் என்ற ஆட்சியாளர்களின் இந்த எண்ணத்தை ஏற்க முடியாது.
எனவே, சென்னையில் கரோனா பாதிப்பை அதிகப்படுத்தி ஆபத்து ஏற்படுத்தவுள்ள டாஸ்மாக் திறக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.