இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பரவிய மிக மோசமான வாட்ஸ்அப் ஆடியோ, அப்பகுதியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்குக் காரணமான விஷமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்திட துடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதனை அனுமதிக்கக் கூடாது.
காவல் துறையில் உள்ள நுண்ணறிவுப் பிரிவு, சைபர் க்ரைம் பிரிவு போன்றவற்றை அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள், அவற்றைக் கொண்டு மக்களிடம் பகைமையை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களை முன்கூட்டியே தடுக்க வேண்டும். காவல் துறை சரியாக செயல்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய நிலையே வந்திருக்காது.
இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகங்களையோ, தனி நபர்களையோ குறிவைத்து சமூக வலைதளங்களில் இழிவு பரப்புரை செய்யப்படுவதை முற்றிலுமாகத் தடுப்பதற்கு காவல் துறை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய அளவிலும் அதற்கான சிறப்புக் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதிலும் சாதி, மதத்தின் அடிப்படையில் பரப்பப்படும் அவதூறுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.