சென்னை நீலாங்கரை வெட்டுவாங்கன்னி பகுதியில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் கடந்த 26 ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வருபவர் நீலம்மாள் (65). அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நினைவு திரும்பி குணமடைந்தார். அதைத்தொடர்ந்து அவர், தனக்கு ஒரு குடும்பம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் மாநில குற்ற ஆவண காப்பகத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். அதன்பின் அவரிடம் மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் தெலங்கானா மாநிலம் சாதுநகரைச் சேர்ந்த ஆஞ்சய்யா என்பரது மனைவி என்பதும், அவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் குடும்ப வறுமை காரணமாக 1994ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளையும், எலி மருந்து கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து சென்னைக்கு வந்து அதனை எண்ணி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
அதையடுத்து ஆவண காப்பக காவல் துறையினர், தெலங்கான காவல் துறையினருக்கு தகவல் அளித்து விசாரிக்கையில் 2007ஆம் ஆண்டு அவரது கணவர் ஆஞ்சய்யா உயிரிழந்ததாகவும், அவர் கொல்லப்பட்டதாக எண்ணிய அவரது மூன்று குழந்தைகளும் உயிருடன் இருப்பதாகவும் தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீலம்மாள் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய ரயில்வே காவலர் பணியிடை நீக்கம்