சென்னை: அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடனும், சில தொழில் நிறுவனங்கள் விரும்பிய பள்ளிகளுக்கு தங்களின் சமூக பாதுகாப்பு நிலையில் பணிகளை செய்து வந்தன.
தேசிய கல்விக் கொள்கை 2020 இல், தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான சமூக பங்களிப்பு நிதியில் இரண்டு சதவீதத்தை பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் மாணவர்கள் பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கலாம் எனவும், இதன் மூலம் உள்ளூர் பள்ளிகள் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியினை பெறுவதற்கு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டுமெனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வியின் முன்னெடுப்புகளுக்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பும் தேவையான தேசிய கல்விக் கொள்கையில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் அதற்கு மாற்றாக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து, டில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன.
ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையின் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் தகவல்களை பெற்று நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற இணையதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளுக்குரிய தேவைப்படும் வசதிகள் குறித்தும் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளன. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பள்ளிக்கு உதவ விரும்புபவர்கள் நேரடியாகவோ அல்லது நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் மூலம் நிதியினை வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகனார் நூற்றாண்டு நிறைவு விழாவினை தொடர்ந்தும், 101 ஆவது பிறந்த நாளில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் தொழிலில் நிறுவனங்கள் சுமார் 50 கோடிக்கு மேல் நிதி உதவி ஒரே நாளில் வழங்கின.
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம் தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுவது அரசு பள்ளிகளை மூடுவதற்கு வழி வகுக்கும் என அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு வலியுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக தனியார் தொழில் நிறுவனங்கள் அரசு பள்ளிகளை நேரடியாக தத்தெடுக்கலாம் அல்லது பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரலாம் அல்லது முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு உதவலாம் என்ற பெயரில் திட்டத்தை அறிவித்துள்ளது.
நம்ம ஸ்கூல் திட்டத்தில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெரும் நிதியினை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசு பள்ளிகளை நிச்சயமாக தனியார்மயத்திற்கு இட்டு செல்லும் என்பதுதான் வருத்தமாக உள்ளது.
1990 இல் கொண்டுவரப்பட்ட மாவட்ட தொடக்க கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம் உள்ளிட்டவை பொது மற்றும் தனியார் பங்களிப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகளை படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு செயல்முறை நடவடிக்கைகளை ஏற்கனவே தொடர்ந்து எடுத்து வந்தன. அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் கொண்டுவரப்பட்ட தேசிய கல்வி கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தனியார் சமூக பங்களிப்பு என்ற வகையில் அரசு பள்ளிகளை தத்தெடுக்கலாம் என்றும் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு போதுமான நிதி உதவி செய்யலாம் என்றும் அதே அம்சங்களை பின்தொடர்ந்து நம்ம ஸ்கூல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதை கவனிக்க தவற கூடாது.
நம்ம ஸ்கூல் திட்டம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து இது நாள் வரை செய்யப்பட்டு வந்த அரசு பள்ளிகள் மீதான இறுதி தாக்குதல் ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கைக்கு ஆதரவாக திகழ்ந்து வரும் அரசு பள்ளிகளை படுவேகமாக தனியார் மயமாக்கும் இந்த முயற்சி, அகில இந்திய கல்வி பாதுகாப்புக்கு குழுவின் தமிழ்நாடு பிரிவு வன்மையாக கண்டிக்கிறது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக திரும்ப பெறவும் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறும்பொழுது, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம் இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பொழுது அரசு பள்ளிகளை தரம் உயர்த்த தேவை நிதி அல்ல, நிதி மேலாண்மை என்றும் கல்வி துறையில் நடைபெறும் முறைகளை தவிர்த்து ஊழல் நிர்வாகத்தை கொடுத்தாலே அரசு பள்ளிகள் தரம் உயரும் என்றும் விமர்சித்து இருந்தேன்.
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் இணையதளத்தை பார்வையிட்ட போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு அரசு பள்ளிகளை மேம்படுத்த என்னென்ன தேவை எவ்வளவு நிதி தேவை என்று பள்ளி வாரியாக புள்ளி விவரங்களை தமிழ்நாடு அரசின் நம்ம ஸ்கூல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் சொக்கன் கொள்ளை உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தேவையான என்ன என்ற விவரங்களை குறிப்பிடப்பட்டுள்ளது ஆய்வு செய்தேன். அப்போது அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருந்தன. நம்ம ஸ்கூல் இணையதளத்தில் உள்ள விவரங்களை நம்பி நிதியினை அளிப்பவர்கள் பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற எண்ணும் நிலை உள்ளது.
இணையதளத்தில் தவறான தகவல்களை அளித்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி குறித்தும் இப்படிப்பட்ட தவறான போலியான மிகைப்படுத்தப்பட்ட விவரங்கள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். உடனடியாக இந்த இணையதளத்தில் உள்ள போலி விவரங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். உண்மையான வெளிப்படை தன்மை கொண்ட விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். மக்கள் வழங்கும் நிதி முறையாக செலவிடப்படும் என்கிற உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு வழங்குவதோடு மக்களின் நம்பிக்கை பெற முயற்சிக்க வேண்டும். அதுவரை இந்த திட்டத்தில் நிதி வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென கூறியுள்ளார்.
நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டு பல்வேறு தரப்பிலும் நிதி வழங்கப்படும் வரும் நிலையில், இணையதளத்தில் புள்ளி விவரங்கள் தவறாக உள்ளது என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள் மூலம் பல லட்சம் செலவில் இணையதளம் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நம்ம ஸ்கூல் திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட பொழுது, தேசிய கல்விக் கொள்கையை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம். அதில் உள்ள சில தகவல்களையும் கருத்துக்களையும் எடுத்துக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கியூட் (CUET) தேர்வு தேதி அறிவிப்பு